வணிகம்

முடிந்தது அமெரிக்கா விதித்த காலக்கெடு! பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்?

முடிந்தது அமெரிக்கா விதித்த காலக்கெடு! பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்?

webteam


இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்தது. 

இந்நிலையில் அமெரிக்கா விதித்த காலக்கெடுவான மே 2 ம் தே‌தி கடந்துவிட்டது. இந்நிலையில் க‌ச்சா எண்ணெய் இற‌க்குமதி தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அடுத்தக்கட்ட நடவடிகையை அமெரிக்கா கவனித்து வருகிறது. மே2ம் தேதிக்கு பிறகு காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என அமெரிக்க ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு‌‌‌‌ அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்‌புள்ளதாகவும் தெரிகிறது.‌‌

இந்நிலையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாகிவிடும். அதன் தாக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியதாகவும், இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.