வணிகம்

கிரெடிட் கார்டில் வட்டியின்றி பணம் எடுக்கலாம்... IDFC First Bank-ன் புதிய வசதி எத்தகையது?

கிரெடிட் கார்டில் வட்டியின்றி பணம் எடுக்கலாம்... IDFC First Bank-ன் புதிய வசதி எத்தகையது?

webteam

வங்கித் துறையை பொறுத்தவரை வித்தியாசமான புராடட்களை உருவாக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. கிட்டத்தட்ட ஒரே விதமான புராடக்ட்களில் சில சில மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பிரிவில் புதிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank). கடன் அட்டை என்பது முக்கியமான சந்தையாக இருந்தாலும் இதன்மீது பொதுமக்களுக்கு பெரிய பயம் இருக்கிறது. கடன் அட்டையை சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் புதைக்குழியில் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் கடன் அட்டையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனை மாற்றும் முதல் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

கடன் அட்டையை பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அடுத்த 45 நாட்களுக்குள் செலுத்தும்பட்சத்தில் வட்டியில்லை. உதாரணத்துக்கு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி செய்யும் செலவுகளுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பணம் செலுத்தினால் போதும். ஒருவேளை இந்த எல்லையை தாண்டினால் அதன்பிறகு நாம் செலுத்தும் வட்டி மிக மிக அதிகமாக இருக்கும். அதிகபட்சம் 40 சதவீதம் வரைக்கும் (ஆண்டு வட்டி) செலுத்த வேண்டியிருக்கும். மாதாந்திர அடிப்படையில் பார்த்தால் 3.5 சதவீத வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

9 சதவீத வட்டி:

இந்த நிலையில், கிரெடிட் கார்டுகளுக்கான மாறுபடும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய 'ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க்' திட்டமிட்டிருக்கிறது. 9 சதவீதம் முதல் 36 சதவீதம் என மாறுபடும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்திருக்கிறது. சம்பந்தபட்டவர்கள் கடனை எப்படி திருப்பு செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

'கிரெடிட் கார்டு சந்தையில் காலதாமதமாக நாங்கள் நுழைகிறோம். அதனால் மற்ற நிறுவனங்களில் இருந்து மாறுபட்டால்தான் கிரெடிட் கார்டு சந்தையில் எங்களால் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியும்' என வங்கியின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) மதிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

'ஆரம்பகட்டத்தில் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அழைப்பின் அடிப்படையில் நாங்கள் கொடுக்க இருக்கிறோம். அதன் பிறகு படிப்படியாக இதனை இதர வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இருக்கிறோம். மேலும், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் பலர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் வட்டி விகிதத்தை தனிநபர் கடனுக்கு சமமாக கொண்டுவரும் பட்சத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது உயரும்' என்றும் மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியை வழங்க வங்கி திட்டமிட்டிருப்பதால் இதர வங்கிகளும் இதேபோன்ற புராடக்ட்களை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

வட்டி இல்லாமல் பணம் எடுக்கலாம்:

கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்து பொருட்கள் அல்லது சேவைகளை பயன்படுத்த முடியும். 45 நாட்களுக்கு வட்டி இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதே கிரெடிட் கார்டுகளை டெபிட் கார்டுகளைபோல பணம் எடுத்துக்கொள்ளவும் முடியும். ஆனால் எடுத்த நொடியில் இருந்து வட்டி கணக்கிடப்படும். தவிர ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.250 பிடித்தம் செய்யப்படும். (சில வங்கிகள் இதைவிட கூடுதல் தொகை கூட வசூலிக்கின்றன).

ஆனால், 'ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி' வட்டி இல்லாமல் ரொக்கம் எடுப்பதை அனுமதிக்கிறது. (ஆனால், பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும்). ஏடிஎம் மூலம் எடுத்த பணத்தை 45 நாட்களுக்குள் செலுத்தும் பட்சத்தில் வட்டி கிடையாது. இந்த காலத்துக்கு மேல் செல்லும் பட்சத்தில் வட்டி செலுத்த வேண்டும் என வங்கி அறிவித்திருக்கிறது.

கடந்த நவம்பரில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.62,349 கோடி அளவுக்கு ஸ்வைப் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி 231 கோடி ரூபாய் மட்டுமே ரொக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த சந்தையை விரிவுபடுத்தவேண்டும் என்றால் வட்டியை குறைக்க வேண்டியது அவசியமாகும்.

'நாட்டில் 80 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. ஆனால் சந்தையில் 5 கோடி கிரெடிட் கார்டுகள் மட்டுமே உள்ளன. அதிக வட்டி விகிதமும், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதும் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இதனை சரிசெய்யும்பட்சத்தில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 60 கோடி வரை உயர்த்தமுடியும்' என ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி வி.வைத்தியநாதன் தெரிவித்திருக்கிறார்.

'மார்ச் மாதம் இந்த புதிய கார்டுகளை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். ஓர் ஆண்டு முடிவில் 2 லட்சம் கார்டுகளை வழங்க திட்டமிட்டிருக்கிறோம்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரியும் உயரதிகாரியிடம் உரையாற்றினேன். 'இந்தியாவில் கிரெடிட் கார்டு ஊடுருவல் மிகவும் குறைவு. ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ், கோடக் உள்ளிட்ட வங்கிகள் பெரும்பாலான பங்கினை வைத்திருக்கிறன. குறிப்பாக ஹெச்டிஎப்சி வங்கி 1.49 கிரெடிட் கார்டுகள் (கடந்த செப்டம்பர் வரை) சந்தையில் உள்ளன.

கிரெடிட் கார்டு பிரிவில் லாபம் ஈட்ட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தால்தான் இந்தப் பிரிவை வெற்றிகரமாக நடத்த முடியும். இல்லையெனில் கிரெடிட் கார்டு என்பது ஒரு கூடுதல் சலுகையாக இருக்குமே வெற்றிகரமான பிரிவாக வங்கியால் நடத்த முடியாது.

இதனை உணர்ந்த வங்கி ஆரம்பத்தில் இருந்து அதிக வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கிரெடிட் கார்டுகள் கொடுக்க முடியாது. கிரெடிட் கார்டுகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் மட்டுமே முக்கியமல்ல. இங்கு ரெகவரி முக்கியம். யாரேனும் ஒருவர் பணம் தராவிட்டால் அதனை எப்படி வசூல் செய்வது என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறு கிராமத்தில் இருப்பவர்கூட டெபிட் கார்டு வைத்திருப்பார். அவர் கணக்கில் இருக்கும் பணத்தை அவர் செலவு செய்வார். ஆனால் கிரெடிட் கார்டு என்பது கடன். செலுத்தவில்லை என்றால் அந்த ஊரில் ரெகவரிக்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகே கடன் வழங்க முடியும்.

கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல பேமென்ட் முறைகள் வந்துவிட்ட காலத்தில் கிரெடிட் கார்டுகளுக்கான வளர்ச்சியும் இருக்குமா என்னும் சந்தேகம் எழும். ஆனால், மற்ற பேமென்ட் முறைகள் எல்லாம் இருக்கும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மாற்றும் ஒருமுறை மட்டுமே. ஆனால், கிரெடிட் கார்டு என்பது கடன். அதனால் கடன் அட்டைகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், 60 கோடி கடன் அட்டைகள் என்பது சாத்தியமா என்பது தெரியவில்லை' என கூறினார்.

தேவை அறிந்து கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் மிக சிறந்த சாதனம் கிரெடிட் கார்டு. புதிய உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், கிரெடிட் கார்ட் என்பது கொரோனா போலதான். கிரெடிட் கார்டை பார்த்து பயப்படதேவையில்லை. ஆனால், கவனமாக இல்லை என்றால் உங்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும்.

- வாசு கார்த்தி