வணிகம்

நிதியாண்டின் முதல் 4 மாதத்திலேயே 27.37 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈட்டி சாதனை

நிதியாண்டின் முதல் 4 மாதத்திலேயே 27.37 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈட்டி சாதனை

JustinDurai
அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிகள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதத்தில் 27.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈட்டியுள்ளது. இது கடந்த 2020-21 நிதி ஆண்டின் இதே காலத்தை விட 62% அதிகமாகும். அதேபோல் 2021-22-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தில் 20.42 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி பங்கு முதலீடுகளை இந்தியா ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 112% அதிகமாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் வாகன தொழில்துறை 23 சதவீதத்துடன் முன்னணி துறையாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை (18%), சேவைகள் துறைகளில் (10%) அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகன தொழில் துறையில் அதிகபட்ச அந்நிய நேரடி பங்கு முதலீடு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதி ஆண்டில் (ஜூலை 2021 வரை) ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் கர்நாடகா அதிகபட்சமாக 45%, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 23%, டெல்லி 12% பங்குகளைப் பெற்றுள்ளன.
அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிகள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.