வணிகம்

புனேவில் புது வீடு வாங்கிய தோனி... - சொத்துகளில் முதலீடு செய்யும் பிரபலங்கள்!

புனேவில் புது வீடு வாங்கிய தோனி... - சொத்துகளில் முதலீடு செய்யும் பிரபலங்கள்!

நிவேதா ஜெகராஜா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது புதிய முதலீடாக புனே நகரத்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொரோனா காலத்திலும் இந்திய பிரபலங்கள் பலரும் சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சன் 31 கோடி ரூபாய் மதிப்பில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி இருந்த தகவல் வெளியாகி இருந்தது. மும்பையில் உள்ள கிரிஸ்டல் குரூப் என்னும் குழுமம் இந்தக் குடியிருப்பை கட்டி இருக்கிறது. 28 மாடியில் இந்த வீடு அமைந்திருக்கிறது. ஆறு கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வாங்கப்பட்டிருந்தாலும் ஏப்ரலில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பதிவு கட்டணம் மட்டும் 62 லட்சம் ரூபாய் (மொத்த தொகையில் 2%) செலுத்தியிருக்கிறார் அமிதாப்.

அமிதாப் மட்டுமல்ல, மற்றொரு முன்னணி நடிகருமான அஜய் தேவ்கன் மும்பையின் ஜூஹுவில் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை வாங்கியிருக்கிறார். புதிய பங்களா மே 7 அன்று அஜய் தேவ்கன் மற்றும் அவரது தாய் வீணா ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மற்றொரு பிரபல நடிகர் அர்ஜுன் கபூர் பாந்த்ராவில் உள்ள தனது காதலி மலைக்கா அரோராவின் வீட்டிற்கு அருகில் 20 கோடி ரூபாய் மதிப்பில் 4-பிஹெச்கே குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.

இவர்களைபோல கிரிக்கெட் வீரர் 'தல' மகேந்திர சிங் தோனியும் புனேவில் ஒரு வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். ராஞ்சியில் ஒரு பண்ணை வீடு வைத்திருக்கும் தோனி சமீபத்தில் புனேவின் பிம்ப்ரி - சின்ச்வாட்டில் ஒரு புதிய வீட்டை வாங்கி இருக்கிறார்.

தோனியின் மனைவி சாக்‌ஷி கூட  தங்களின் புதிய வீட்டை நிர்மாணிக்கும் படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இதே புனேவில் ராவெட் பகுதியில் உள்ள எஸ்டாடோ ஜனாதிபதி சங்கத்தில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. `ரைசிங் புனே' அணியில் விளையாடியபோது புனே நகரத்தை அதிகமாக தோனி விரும்பியதாக தெரிகிறது. இதையடுத்தே புனேவில் வீடு வாங்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோனி ஏற்கெனவே சினிமா தொடர்பான வணிகத்தில் இறங்கியுள்ளார். மும்பையில் ‘எம்.எஸ்.டி என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, அதற்காக அலுவலகம் போட்டிருக்கிறார். அதன் முதல் தயாரிப்பாக ஒரு ஆவணப்படத்தை தோனியின் நிறுவனம் கடந்த ஆண்டு தயாரித்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கு அவரது மனைவி சாக்‌ஷி தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.