வணிகம்

''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்

''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்

webteam

பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதால் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது கூட கேள்விக்குறியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செல்போன் பயன்பாடு அத்தியாவசியமானதாக மாறிவிட்ட சூழலில் 3ஜி, 4ஜி தாண்டி அடுத்து 5ஜி நோக்கி இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது. கடுமையான போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை 4ஜி சேவையைக் கூட வழங்கமுடியாமல் தவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் கணிசமாக குறைந்தவண்ணமே உள்ளனர். 

லாபமே இல்லாத நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக கூறப்படுகிறது. 1.76 லட்சம் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவது கூட கேள்விக்குறியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.850 கோடி தேவை எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில்  நிறுவனம் ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை கடன் தொகையில் உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர் பொது மேலாளர் புரன் சந்திரா, '' பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாத வருமானம் குறைவாக இருப்பதால், வருமானத்துக்கும்,செலவீனத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் நிலவுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டிசம்பரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்ட தொகை ரூ.90,000 கோடியை தாண்டியது. நிதி நெருக்கடி காரணமாக 1.76 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க தவறியது குறிப்பிடத்தக்கது.