இந்தியாவில் கார் வாங்க ஆர்டர் கொடுத்து விட்டு ஏழரை லட்சம் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் கார்கள் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப்ஸ் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கார்களில் உள்ள மின்னணு சாதனங்களுக்கு மூலப்பொருளாக உள்ள செமி கண்டக்டர் சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் குறைந்த அளவே கார்களை உற்பத்தி செய்து வருகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்திடம் 3 லட்சத்து 25 ஆயிரம் கார்களுக்கான ஆர்டர்கள் உள்ள நிலையில் அவற்றை விநியோகிப்பதில் தாமதம் நிலவுகிறது. சில வகை கார்களுக்கு 6 மாதம் வரை கூட காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களிடம் 3.5 லட்சம் முதல் 3.75 லட்சம் வரை ஆர்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கார் வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பலரும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை வேகம் பிடித்துள்ளது