Jasprit Bumrah - Shreyas Iyer Twitter
Cricket

‘எப்படி இருக்கிறார்கள் பும்ராவும் ஸ்ரேயாஸூம்?’ - BCCI செயலாளர் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நலம் குறித்த தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார்.

சங்கீதா

முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து பும்ரா விலகினார். இதேபோல் மற்றொரு இந்திய பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பிசிசிஐ

இந்நிலையில், இருவரது உடல்நலம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பவை:

“நியூசிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு கீழ் முதுகில் அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டுவிட்டது. தற்போது அவர் வலியிலிருந்து மீண்டுள்ளார்.

பும்ரா, அறுவை சிகிச்சை முடிந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு மறுவாழ்வு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA), தனது மறுவாழ்வு சிகிச்சையை (rehabilitation) துவங்கியுள்ளார் அவர்.

பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர்

மற்றொரு வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தனது கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக அடுத்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அறுவை சிகிச்சை நிபுணரால் கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகு மறுவாழ்வு சிகிச்சைக்காக (rehabilitation) தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்புவார்” என்று கூறப்பட்டுள்ளது.

இது அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.