Sean Abbott Source PA Wire
Cricket

34 பந்துகளில் அதிரடி சதம் விளாசல்.. டி20 போட்டியில் தரமான சம்பவம் செய்த ஆஸி. ஆல்ரவுண்டர்!

டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் படைத்துள்ளார்.

சங்கீதா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் லீக், தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மொத்தம் 18 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 10-வது குரூப் போட்டியில், இங்கிலாந்து வீரர் சாம் கரண் தலைமையிலான சர்ரே மற்றும் இங்கிலாந்து வீரரும், விக்கெட் கீப்பருமான சாம் பில்லிங்ஸ் தலைமையிலான கென்ட் அணிகளும் மோதின. ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், சர்ரே அணி 41 ரன்கள் வித்தியாத்தில் கென்ட் அணியை தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி, 8.2 ஓவரில் 64 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டது. அப்போது ஜேசன் ராய்க்கு பதிலாக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் ஷான் அபாட், 34 பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இதே டி20 பிளாஸ்டில் இதற்கு முன்னதாக மறைந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அதனை தற்போது 31 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் சமன் செய்துள்ளார்.

நேற்றையப் போட்டியில் ஷான் அபாட் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உள்பட 110 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். ஷான் அபாட் டி20 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே அதிகப்பட்சமாக அடித்திருந்த நிலையில், இந்த சாதனையை அவர் செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்பு குறைந்த பந்துகளை சந்தித்து சதம் விளாசிய வீரர்களில் 4-வது இடத்தில் ஷான் அபாட் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக,

1. கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) - 30 பந்துகளில் சதம் vs புனே வாரியர்ஸ் - 2013

2. ரிஷப் பந்த் (டெல்லி) - 32 பந்துகளில் சதம் vs இமாச்சல பிரதேசம் - 2018

3. விஹான் லூப்பே (நார்த்வெஸ்ட்) - 33 பந்துகளில் சதம் vs லிம்போபோ- 2018

4. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (கென்ட்) - 34 பந்துகளில் சதம் vs மிடில்செக்ஸ் - 2004

5. சான் அபாட் (சர்ரே) - 34 பந்துகளில் சதம் vs கென்ட்- 2023