தன் வாழ்நாள் முழுவதும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, நெல் திருவிழாக்கள் மூலமாக 30 ஆயிரம் விவசாயிகளிடம் பாரம்பரிய நெல்லை கொண்டு சேர்த்த நெல்.ஜெயராமன் நினைவுநாள் இன்று…!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு என்ற கிராமத்தில் மிக ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். படிப்பு சரியாக வராததால் 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்து அங்கேயே பல ஆண்டுகள் வேலைபார்த்தார். நஞ்சில்லா பாரம்பரிய விவசாயம் பற்றி ஆர்வம் காரணமாக நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். நம்மாழ்வார் 2000 ஆண்டுமுதல் தீவிரமான இயற்கை வேளாண்மை பற்றிய பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது நம்மாழ்வாரின் தளபதிகளாக இருந்தவர்களில் முக்கியமானவர் நெல்.ஜெயராமன். நம்மாழ்வார் அளவுக்கோ அல்லது அவரின் சகாக்கள் அளவுக்கோ படிப்பறிவு இல்லையென்றாலும் எடுத்த வேலையை எத்தனை சிரமப்பட்டேனும் முடித்துவிடும் பேராற்றல் கொண்ட இவரை நம்மாழ்வார் பெரிதும் விரும்பினார்.
2004ம் ஆண்டு நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை வலியுறுத்திய நடைபயணத்தை பூம்புகாரில் தொடங்கி கல்லணையில் முடித்தார். அந்த நடைபயணத்தில்தான் தலைஞாயிறு அருகேயுள்ள வடகூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் “காட்டுயாணம்” என்ற நெல்லை நம்மாழ்வாரின் கையில் கொடுத்து இது நமது பாரம்பரியமான நெல்ரகம் இப்போது எந்த விவசாயியிடமும் இந்த நெல்வகை இல்லை, நான்மட்டும் தொடர்ச்சியாக இந்த நெல்வகையை பயிரிட்டுவருகிறேன் அதனால் இந்த நெல்லை எப்படியாவது காப்பாற்றுங்கள், பரப்புங்கள் என்றார். ஆவலுடன் அந்த நெல்வகையை பெற்றுக்கொண்ட நம்மாழ்வார் அந்த விதைநெல்லை ஜெயராமனின் கரங்களில் கொடுத்தார். அந்த நடைபயணத்திலேயே கவுனி, பூம்பாறை, கைவிரசம்பா உள்ளிட்ட மேலும் 6 நெல்வகைகள் கிடைத்தன. இந்த நெல்வகைகளை பரப்பி, பெருக்கும் பொறுப்பை நம்மாழ்வார் ஜெயராமனிடம் ஒப்படைத்தார்.
அப்போது முதலாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிராமம், கிராமமாக சென்று பாரம்பரிய நெல்வகைகளை யாராவது வைத்திருக்கிறார்களா என்று விசாரித்து சேகரிக்க ஆரம்பித்தார். சேகரித்த விதைகளை எப்படி பரப்புவது என்று யோசித்து சில விவசாயிகளிடம் கொடுத்து அவற்றை பயிரிடவும் சொன்னார். ஜெயராமனிடம் பெரிய அளவில் விவசாய நிலம் இல்லை, அதனால் அவரால் இந்த நெல்வகைகளை அதிகம் பயிரிட முடியாத சிரமமான சூழலில் இருந்தார். அப்போது நரசிம்மன் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் உள்ள தங்களது பண்ணையை இந்த பணிக்காக பயன்படுத்திக்கொள்ள ஜெயராமனிடம் கொடுத்தார்கள். அதன்பிறகு இவரின் பணிகள் மேலும் வேகம் கொண்டது.
2004ல் ஆரம்பித்து 2006ம் ஆண்டுக்குள் கிட்டத்திட்ட 40க்கும் மேற்பட்ட நெல்வகைகளை மீட்டெடுத்திருந்தார் ஜெயராமன். விதைநெல்லை மீட்பதை வேலையாக மட்டும் கொள்ளாமல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த நம்மாழ்வாரும், ஜெயராமனும் 2006 முதல் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆதிரெங்கம் விவசாய பண்ணையில் நெல்திருவிழா நடத்த ஆரம்பித்தனர். முதல் ஆண்டு வெறும் இருநூறு விவசாயிகள், சுமார் 40 நெல் வகைகளுடன் தொடங்கிய அவருடைய பயணம். படிப்படியாக வளர ஆரம்பித்தது. இந்த மேடையில்தான் நம்மாழ்வார் இவருக்கு “நெல்”.ஜெயராமன் என்ற அடைமொழியை வழங்கினார்.
நெல் திருவிழாவில் ஒரு புதிய யுத்தியை அறிமுகப்படுத்தினார் ஜெயராமன். அதாவது இந்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு இரண்டு கிலோ விதைநெல்லை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அடுத்த ஆண்டு அந்த விவசாயி அந்நெல்லை பயிரிட்டு விளைவித்து நான்கு கிலோவாக திரும்ப நெல்திருவிழாவில் கொடுக்கவேண்டும். இந்த சிறப்பான யுத்தியால் ஆச்சர்யப்படும் வேகத்தில் பாரம்பரிய நெல் பரவ ஆரம்பித்தது.
இவரின் பாரம்பரிய நெல் மீட்பு பணி பற்றி தெரிய ஆரம்பித்த பிறகு தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் அழைத்து பாரம்பரிய நெல்லை இவரிடம் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவர் பயணம் செய்யாத நாட்களே இருக்காது. எப்போதும் எந்த ஊருக்காவது பேருந்தில் பயணித்தபடியேதான் வாழ்ந்தார். இந்த கடும் உழைப்பால்தான் வெறும் ஒற்றை நெல்லுடன் ஆரம்பித்த இவரின் பயணம் 174 நெல்வகைகளாக மாறியது.இவரிடம் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல்லை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
விதைநெல்லை சேகரிக்கவும், பரப்பவும் நெல்.ஜெயராமன் மேற்கொண்ட ஓய்வற்ற பயணங்களால் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உயிரிழந்தார். சிறந்த சாதனையாளருக்கான மத்திய அரசின் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருந்தாலும் நம்மாழ்வார் கொடுத்த “நெல்” என்ற அடைமொழியைத்தான் பெரிய விருது என்று எப்போதும் சொல்லுவார் நெல்.ஜெயராமன். அதுபோல நெல்லுள்ளவரை இவரின் பெயரும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.
-வீரமணி சுந்தரசோழன்