விவசாயம்

"உழவர்கள் பாராட்டும் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா?" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோபம்

"உழவர்கள் பாராட்டும் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா?" - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோபம்

Veeramani

உழவர்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை கொச்சைப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் கருத்துக்கு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நாடே போற்றுவதாகவும், வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் பெருமக்கள் அனைவரும் பாராட்டுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.



நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு, காவிரி நீர் கடைமடை வரை செல்வதை உறுதி செய்தல், தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான பிரச்னைகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் நிதிநிலை அறிக்கையை பாராட்ட மனமில்லாமல், ஆளுங்கட்சியாக இருந்த போது பச்சை துண்டு போட்ட போலி விவசாயி, போலி பச்சை துண்டு வேடத்தை எடப்பாடி பழனிசாமி ரிபீட் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.