விவசாயம்

"நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி பதிவு முறையை ரத்து செய்க"- சீமான் அறிக்கை

"நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி பதிவு முறையை ரத்து செய்க"- சீமான் அறிக்கை

நிவேதா ஜெகராஜா

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், ஆண்டுக் கணக்கு முடிப்பிற்காக மூடப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்து வருவதாகவும் அக்கோரிக்கைகளுக்கு மத்தியில் விவசாயிகள் இணையம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும், வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் என அரசு அவர்களை சொல்வது ஏற்புடையதல்ல எனவும் சீமான் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய தனது அறிக்கையில், “ஏற்கெனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அப்படியான நிலையில் எவ்வித முன்னறிவிப்புமில்லாத இந்த திடீர் உத்தரவு, நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. இணைய முன்பதிவு - வங்கிக்கணக்கு இணைப்பு ஆகியவற்றை அவசரகதியில் நடைமுறைக்கு கொண்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முடிவு, எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இணைய வழி முன்பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அதை அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.