கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கோடை நெல் அறுவடைப் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதமாணிக்கம் பெரும்பண்ணையூர் வேலங்குடி திருக்கொட்டாரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் முற்றிலும் சார்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இந்த மழை தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். மேலும் தற்போது மழை நீரை வடிய வைப்பதற்கான பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருசில வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினால் தண்ணீர் வடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகும். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்