விவசாயம்

குறைந்தபட்ச ஆதரவு விலை திரும்பப்பெறப்படாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குறைந்தபட்ச ஆதரவு விலை திரும்பப்பெறப்படாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Veeramani

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திரும்பப்பெறப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுடன் அரசாங்கம் கலந்துரையாடியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் “ இனியும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடரும், அது திரும்பப் பெறப்படாது, புதிய பண்ணைச் சட்டங்கள் விவசாயிகளுக்கான சந்தைகளை திறந்துவிட்டுள்ளன. மேலும் இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளையும், தேர்வுகளையும் அளிக்கின்றன” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் “பல விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை இருந்தபோதிலும், நெல் மற்றும் கோதுமையின் விலை ஒவ்வொரு ஆண்டும் மேல்நோக்கி திருத்தப்பட்டு வருகிறது. இதனால் பருப்பு வகைகள், தினை மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர்செய்யும் விவசாயிகள் நெல் மற்றும் கோதுமை சாகுபடிக்கு மாறுகின்றனர். இதன் விளைவாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கிறது அதுபோல விரைவில் அழிந்துபோகக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை. இதனால் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் இப்பொருட்களை சாலையில் எறிவதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த மூன்று சட்டங்களின்படி, விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தங்களின் விளைபொருட்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபடலாம்” என்றும் அவர் கூறினார்.