வேளாண்மைத்துறையினர் ''பவுன்டேஷன் விதை'' என தரமற்ற போலியான உளுந்து விதையை வழங்கியதால் 60 நாட்களுக்கு மேலாகியும் காய் காய்க்கவில்லை என வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. விவசாயக் குறைதீர் கூட்டத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர்.
வேதாரண்யம் வேளாண்மைத்துறையினர் ’’பவுன்டேஷன் விதை’’ என தரமற்ற போலியான உளுந்து விதையை வழங்கியதால் 60 நாட்களுக்கு மேலாகியும் காய் காய்க்கவில்லை என்றும், விவசாயிகளுக்கு கடந்த 2020-21ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கியதில் உள்ள குளறுபடியை சரிசெய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினர். தொடர்ந்து மானங்கொண்டான் ஆற்றில் ஆதனூர் கிராமத்தை மையமாகக்கொண்டு 50 சுற்று வட்டார கிராமங்கள் பயன்பெறும் வகையில் மின் இறைவைப் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்;கை விடுத்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒ.எஸ் மணியன் எம்எல்ஏ பேசியதாவது, தலைஞாயிறு அரிச்சந்திரா நதியில் சுமார் ரூ.520 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக உப்புத் தண்ணீர் உள்ளே செல்லாத நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தில் இந்த ஆண்டு உப்பு தண்ணீர் உள்ளே புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், விவசாயிகள் சொந்த நிலங்களில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.