விவசாயம்

'தாலியை அடகு வைத்து செய்த பயிர்களின் நிலை!' - கடலூரில் 1 லட்சம் ஏக்கர் பாதிப்பு

'தாலியை அடகு வைத்து செய்த பயிர்களின் நிலை!' - கடலூரில் 1 லட்சம் ஏக்கர் பாதிப்பு

Sinekadhara

பருவம் தப்பிய மழையால் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிக ஏக்கரிலான பயிர்கள் சாய்ந்து மீண்டும் முளைவிட்டிருக்கின்றன. தாலியை அடகு வைத்து செய்த பயிர் மழை நீரில் வீணாகிக் கிடப்பது விவசாயிகளின் மனதை வெதும்பச் செய்திருக்கிறது.

அறுவடை நேரத்தில் கதிர்முற்றி தலைசாய்ந்திருக்க வேண்டிய பயிர்கள் அத்தனையும், மழையால் சாய்ந்து, நிலத்திலேயே முளைவிட்டு விவசாயிகளின் இத்தனை மாத உழைப்பை அடியோடு சாய்த்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் கொடியாலம், முகையூர், பரிவிளக்கம், பெருங்களூர், ராதாமூர், சிவக்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடை நேரத்தில் பயிர்களை பறிகொடுத்த துக்கமும், வேதனையும் ஒவ்வொரு விவசாயி முகத்திலும் படிந்து கிடக்கிறது. தாலியை அடகு வைத்து செய்த பயிர் என்று கண்ணீர் விடுகிறார் விவசாயிகளில் ஒருவரான ஈஸ்வரி.

பாடுபட்டு வளர்த்த பயிர்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் பல விவசாயிகள் மனமுடைந்து உடல்நலம் குன்றியுள்ளனர். இதனால் பெண்கள்தான் வந்து வயலை பார்த்துச்செல்கிறார்கள் என்கிறார் அவர்.

ஏற்கெனவே நிவர், புரெவி புயல்களால் ஒருலட்சம் ஏக்கர் அளவுக்கு பாதிக்கப்பட்டது. பருவம் தவறிய மழையால் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களை பாதுகாக்கும் நோக்கில் நிவாரணம் வழங்கக் கோருகிறார்கள் விவசாயிகள். புயல் சமயத்தில்கூட இந்த அளவு பாதிப்பு இல்லை என்கிறார்கள் இவர்கள். எதிர்பாராத மழையால் ஒட்டுமொத்த மாவட்டமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.