விவசாயம்

திமுக ஆட்சி உழவர்களுக்கானது: மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

திமுக ஆட்சி உழவர்களுக்கானது: மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

Sinekadhara

 விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்றுதான் சொல்லவேண்டும். தற்போது அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் துறையின் பணிகளை செய்துவருகின்றனர். இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்காது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின்கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்புகள்தான் விவசாயிகளுக்கு தரப்பட்டன. ஆனால் 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசை எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் மின்சார வாரியத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டது. சூரியசக்தி மின் உற்பத்திக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க உள்ளது. திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின்பூங்கா அமைக்கப்பட உள்ளது. மின்சார வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் முடிந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்’’ என்று பேசினார். பின்னர் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.