விவசாயம்

பருப்புக்கு ரூ.114, கோதுமைக்கு ரூ.40... ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

பருப்புக்கு ரூ.114, கோதுமைக்கு ரூ.40... ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

நிவேதா ஜெகராஜா

2022-23-ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பில், "ராபி பயிர் விளைவிப்பவர்களுக்கு, லாபமான விலையை உறுதிசெய்ய, ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டை விட, மிக உயர்ந்த அதிகரிப்பு மசூர் பருப்பு மற்றும் கடுகுக்கு (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400), பருப்புக்கு (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூவாக இருந்தால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.114 அதிகரிக்கப்பட்டுள்ளது. பலவகையான பயிர்கள் விளைவிக்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், இந்த வேறுபட்ட விலையின் நோக்கம்.

கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,975-லிருந்து ரூ.2,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதரவு விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளதால், கோதுமைக்கு உற்பத்தி விலையை விட 100 சதவீத லாபம் கிடைக்கும். பார்லியின் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600-லிருந்து ரூ.1,635 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மசூர் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,100-லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் கடுகின் ஆதரவு விலை ரூ.4,650-லிருந்து ரூ.5,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குங்குமப்பூ-வின் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,327-லிருந்து ரூ.5,441 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நியாயமான நிலை கிடைக்க, உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த 2018-19ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022-23ம் ஆண்டில் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், கடுகை விளைவிப்பவர்களுக்கு உற்பத்தி விலையை விட 100 சதவீத லாபம், பருப்பு வகைகளுக்கு 74 முதல் 79 சதவீத லாபம், பார்லிக்கு 60 சதவீத லாபம், குங்குமப்பூவுக்கு 50 சதவீத லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று பயிர்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்கவும், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றவும், தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையேயான சமநிலையற்ற தன்மையை சரிசெய்யவும், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் தினை வகைகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலையை மாற்றியமைக்க கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் உதவும். ரூ.11,040 கோடி மதிப்பிலான இத்திட்டம், சமையல் எண்ணெய் உற்பத்தி துறையை விரிவுபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும்.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பிரதமரின் அன்னதத்தா ஆய் சன்ரக்‌ஷன்’ (ஆஷா) திட்டம், விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருளுக்கு லாபம் பெற உதவும். இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில், விலை ஆதரவு திட்டம்(PSS), விலை குறைபாட்டை செலுத்தும் திட்டம் (PDPS), தனியார் கொள்முதல் மற்றும் இருப்பு வைத்திருப்பு திட்டம் (PPSS) என்ற 3 துணை திட்டங்கள் உள்ளன" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.