இந்தியாவிலேயே மிளகு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிளகு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மிளகு இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகின் மிளகு தேவையை 34 சதவீதம் வியட்நாமும், மீதத்தை இந்தியாவும் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. நாட்டின் 95 சதவீத மிளகு உற்பத்தி கேரளாவில் மட்டும் நடக்கிறது. கேரளாவின் மொத்த மிளகு உற்பத்தியில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 85 சதவீதம் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா முடக்கத்தால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டு மிளகு ஏற்றுமதி முற்றிலும் முடங்கியது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட மிளகு முழுவதுமாக தேக்கமடைந்தது. இதனால் கொரோனா காலத்திற்கு முன் கிலோ 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலைபோன மிளகு படிப்படியாக குறைந்து அதிகபட்சமாக கிலோ 250 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விலையே நீடித்து வந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் வெளிநாட்டுக்கான ஏற்றுமதி துவங்கியுள்ளது. சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் ஐயப்ப பக்தர்களும், அடுத்துவரும் சுற்றுலாப்பயணிகளும் மிளகை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதோடு இடுக்கி மாவட்டத்தில் மிளகு பறிப்பு சீஸன் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துவங்கும். எனவே மிளகிற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை கிலோ 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனையான மிளகு விலை தற்போது 500 முதல் அதிகபட்சமாக 650 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் பிறகு இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.