கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா. நடப்பு ஆண்டின் சிறந்த மாங்கனியாக அல்போன்சா வகை தேர்ந்தெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில், அரசு மற்றும் தனியார் துறை சார்பில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, மாங்கனி போட்டிகள் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மா உற்பத்தி விவசாயிகள் பங்கேற்று தங்களின் உற்பத்தி வகைகளை காட்சிக்கு வைத்தனர். இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான சிறந்த மா வகைக்கான முதல் பரிசை சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி காட்சிக்கு வைத்த அல்போன்சா ரகம் மாங்கனியும், சிறந்த விவசாயிக்கான முதல் பரிசையும் வென்றார்.
சிறந்த அரசு துறை அரங்கிற்கான விருது தோட்டக்கலை துறைக்கு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் தோட்டக்கலை, வேளாண்மை, மின்வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.