மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.70ல் இருந்து ரூ.100ஆக உயர்த்தி ரூ.2,060க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும், சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.50ல் இருந்து ரூ.75ஆக உயர்த்தி ரூ.2,015க்கு கொள்முதல் எனவும் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.