விவசாயம்

மழையால் முளைத்த பயிர்களுக்கு இழப்பீடு வேண்டும் - விவசாய சங்கம் வேதனையுடன் கோரிக்கை

மழையால் முளைத்த பயிர்களுக்கு இழப்பீடு வேண்டும் - விவசாய சங்கம் வேதனையுடன் கோரிக்கை

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் மழையால் வயலில் முளைத்த பயிர்களுக்காவது உரிய இழப்பீட்டை தமிழக அரசு தரவேண்டும் என விவசாய சங்கம் வேதனையுடன் கோரிக்கை விடுத்திருக்கிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டதில், கிட்டத்தட்ட 70 லிருந்து 80 சதவீதம் அறுவடை செய்யப்பட்டு மீதம் 20லிருந்து 30% அறுவடை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து விட்டுவிட்டு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப்பயிர்கள் மழையால் சாய்ந்தன. அவற்றில் ஒருசில இடங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் வயல்வெளிகளில் முளைக்கத் தொடங்கிவிட்டன.

இதனால் திருவாரூர் மாவட்டம் மாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அரசு உண்மையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும் என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

மேலும் தற்போது பெய்யும் கனமழையால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பயிர் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யவில்லை என அந்த மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிப்பதாகவும், ஆகவே அந்த மாவட்டங்களில் பயிர் பாதித்த இடங்களில் அரசு உரிய ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும் கஜா புயல் முதல் வர்தா புயல் வரை டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தரமற்ற மின்கம்பிகள் பயன்படுத்தி சீரமைப்பு பணி மேற்கொண்டதால்தான் நாள்தோறும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து பல்வேறு இடங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும், இதை அரசு கவனத்தில் கொண்டு தரமற்றப் பொருட்களை மாற்றி சீர்செய்ய வேண்டும் இல்லையென்றால் நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது கடினம் என்றும் கூறினார்.