விவசாயம்

"விவசாயிகள் துயர்கண்டு வேதனைப்படுகிறேன்!" - பாஜக முன்னாள் எம்.பி தர்மேந்திரா கருத்து

"விவசாயிகள் துயர்கண்டு வேதனைப்படுகிறேன்!" - பாஜக முன்னாள் எம்.பி தர்மேந்திரா கருத்து

sharpana

’விவசாயிகளின் துன்பங்களைக் கண்டு மிகுந்த வேதனையாக இருக்கிறது’ என்று பாஜக முன்னாள் எம்.பி.யும், பழம்பெரும் இந்தி நடிகருமான தர்மேந்திரா, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த 16 நாட்களாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் மட்டுமல்ல, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய பாஜக கூட்டணியில் உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்தார். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ சோம்பிர் சங்க்வான், விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

சமீபத்தில், நடிகரும் பஞ்சாப் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பியும் நடிகர் தர்மேந்திராவின் மகனுமான சன்னி தியோல் ”பாஜக பக்கமும் நிற்கிறேன்; விவசாயிகள் பக்கமும் நிற்கிறேன்” என்று இரட்டை நிலைப்பாட்டுடன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சன்னி தியோலின் தந்தையும் பாஜக முன்னாள் எம்.பியுமான பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ”விவசாய சகோதரர்களின் துன்பங்களைக் கண்டு நான் மிகுந்த வேதனை அடைகிறேன். அரசு வேகமாக ஏதாவது செய்ய வேண்டும்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம், இவர் முன்னாள் பாஜக எம்.பி என்றால், இவரது மனைவி நடிகை ஹேமமாலினி கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் முறையாகவும் வெற்றிபெற்று எம்.பியாக உள்ளார். குடும்பமே பாஜகவின் பொறுப்புகளில் இருக்கும்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக தர்மேந்திரா கருத்து தெரிவித்திருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.