விவசாயம்

மழையால் அழுகி வெடித்து தொங்கிய 50 டன் திராட்சைகள் - திண்டுக்கல் விவசாயிகள் வேதனை

மழையால் அழுகி வெடித்து தொங்கிய 50 டன் திராட்சைகள் - திண்டுக்கல் விவசாயிகள் வேதனை

webteam

திண்டுக்கல் பகுதியில் பெய்த மழையின் காரணமாக திராட்சைப் பழங்கள் அழுகி வீணாகியது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்.

தற்பொழுது பன்னீர் திராட்சை சீசன் என்பதால் திண்டுக்கல்லை சுற்றியுள்ள வெள்ளோடு, செட்டியபட்டி, ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கலிக்கம்ப்பட்டி, கொடைரோடு உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பன்னீர் திராட்சை சுமார் 700ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விளைந்த திராட்சையை அறுவடை செய்யக்கூடிய பருவம் இது. ஆனால் கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சைகள் மீது மழைநீர் பட்டதால் பழங்கள் அனைத்தும் வெடித்து அழுகி கீழே விழத் துவங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் 50டன்னுக்கு மேல் திராட்சைகள் வீணாகி உள்ளன.

திராட்சை வியாபாரிகளுக்கு சென்ற வருடம் கொரோனா காரணமாக பன்னீர் திராட்சையை வாங்க ஆளில்லாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த வருடம் மழை பெய்து திராட்சை பழங்கள் வெடித்து கீழே கொட்டியதால் இந்த வருடமும் மகசூல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக திராட்சை பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு திராட்சை பழங்களை சேமித்து வைத்து விற்பனை செய்ய வசதியாக குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு திராட்சை பயிர் செய்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு திராட்சையை வாங்க வரக்கூடிய வியாபாரிகள், தோட்டத்தில் வைத்தே ஒரு கிலோ திராட்சை ரூ 80 க்கு வாங்கி சென்றனர். ஆனால் தற்பொழுது மழையின் காரணமாக ஒரு கிலோ திராட்சை முப்பதுக்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.