குற்றம்

சிவகங்கை: கடந்த ஒரு வாரத்தில் 101 ரவுடிகள் கைது; நடவடிக்கை தொடருமென மாவட்ட எஸ்.பி. உறுதி

webteam

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 101 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வழங்கிய 25,000 ரூபாய் வெகுமதி பணத்தை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 21-ஆம் தேதி முதல் மொத்தம் 757 பேர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக தணிக்கை செய்யப்பட்ட நிலையில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 48 பேரிடம், ‘பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம்’ என நன்னடத்தை உறுதிமொழி பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வீடுகள், வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 71 அரிவாள், 42 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார். மேலும் ரவுடிகளுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினர்.