கல்வி

செவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்

webteam

காது கேளாத தமிழக இளைஞரொருவர் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வில் 750-வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த 27 வயதான காது கேளாத இளைஞர், பல்வேறு தடைகளை தகர்த்து தமிழ் மொழியை விருப்ப பாடமாக எடுத்து யு.பி.எஸ்.சி., சிவில் சர்விஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் வசித்து வரும் தர்மலிங்கம், அமிர்தவள்ளி தம்பதியரின் இரண்டாவது மகன் ரஞ்சித். சிறு வயதிலிருந்தே காதுகேளாத குறைபாடு கொண்ட ரஞ்சித், தனது பெற்றோர்களின் உதவியால் நம்பிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார்.

12-ஆம் வகுப்பில் காதுகேளாத மாணவர்களின் பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்து படிப்பில் தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டினார் ரஞ்சித். பிறகு கல்லூரியில் மெக்கானிக் பொறியியல் படிப்பிலும் 80 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்.

அதில் பல நிறுவனங்கள் அவருடைய காதுகேளாத குறைபாட்டை காரணம் காட்டி பணி வழங்காமல் இருந்துள்ளது. அப்போதுதான் அரசு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது ரஞ்சித்துக்கு. சிறு வயதிலிருந்தே பழகிய புத்தக வாசிப்பு இருந்ததால், போட்டித் தேர்வுக்கு அவர் தயாராகியுள்ளார்.

புத்தக வாசிப்பே இன்று தனது இந்த வெற்றிக்கான அடித்தளம் என குறிப்பிடும் அவர், யு.பி.எஸ்.சி. தேர்விற்கான பயிற்சியின்போது சமூக வலைத்தளங்களை முற்றிலும் தவிர்த்து முழு ஈடுபாட்டுடன் படித்ததையும், தான் கடந்த வந்த பாதையில் உள்ள சவால்களையும், சாதித்த தருணங்களையும் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.

இவரின் தாய் அமிர்தவள்ளி நம்மிடையே பேசுகையில், “ரஞ்சித் பிறந்த 7 மாதங்களில் அவனுடைய குறைபாடு எங்களுக்கு தெரிய வந்தது. அப்போதே ரஞ்சித்திற்காகவே சொந்த ஊரான ஈரோட்டை விட்டு கோவைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே அவருக்காகவே நான் காது கேளாத மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியப் படிப்பை படித்தேன். படித்துவிட்டு, ரஞ்சித் படித்த அதே சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியை துவங்கினேன்.

என் கண் முன்னேயே வளர்ந்தார் என் மகன். டைரியின் மூலமும், வெளியில் அழைத்து சென்று அனைத்தையும் காட்சிகளாக காண்பித்ததன் மூலமும், தொலைக்காட்சிகள் மூலமும் சமூகத்தை ரஞ்சித்திற்கு உணர்த்தி வந்தேன். என் 25 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றியாகவே ரஞ்சித்தின் இந்த சாதனையை பார்க்கிறேன்” என்றார். நாத்தழுவ தன் மகனின் வெற்றியை அவர் விவரிக்கும்போதே தன்னை மீறி கண் கலங்குகிறார்.

இன்னும் பல வெற்றிகளை பெற, எங்கள் சார்பிலும் வாழ்த்துகள் ரஞ்சித்!