திருவாரூர் மாவட்டத்தில் வயல்களில் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டே களை எடுப்பது பார்ப்போரை உற்சாகமூட்டி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. கனமழை காரணமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போயின. தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால் பல இடங்களில் பயிர்கள் மூழ்கி சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. வயல்வெளிகளில் களைகளும் பெருகியது. ஏற்கெனவே களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அடித்தபோதும் அவை மழையின் காரணமாக அழியாமல் மீண்டும் துளிர்த்து வந்தது.
இந்த நிலையில் தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் ஆட்களை வைத்து களைகளை அகற்றி வருகிறார்கள். வயலில் வேலை செய்யும் பெண்கள் அலுப்பு தட்டாமல் இருக்க பாடல்களைப் பாடி வேலை செய்துவருகின்றனர். மேலும், தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கம்போல் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.