உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? எதற்காக தொடர்கிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்?

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? எதற்காக தொடர்கிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்?
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? எதற்காக தொடர்கிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்?
Published on

மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, ஆனால் இதனை ஏற்றுகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தை தொடரும் காரணம் என்ன?

3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை, குழு அமைப்பு :

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த சட்டங்களுககு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பிரச்னைக்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கிறது. அக்குழுவில், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி தலைமையில், பாரதிய கிசான் சங்க தலைவர் புபேந்தர் சிங் மன், சிவ்கெரி சங்கிதான் அமைப்பை சேர்ந்த அனில் தன்வாட் மற்றும் சர்வதேச விவசாய கொள்கையின் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

 

எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் மூன்று சட்டங்களுக்கும் முழுமையாக தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதேபோல், யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அனைத்துக் கட்ட விசாரணைகளையும் முடித்த பின்னர் 2 மாதத்தில் இந்த குழுவானது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை நீதிமன்றம் அதனை கண்காணித்து கொண்டிருக்கும்.  நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழுவை விவசாய சங்கங்கள் ஏற்க மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எங்களால் முடிந்த வரையில் இந்த விவகாரத்தில் பிரச்னையை தீர்க்க தான் முயற்சி செய்து வருகிறோம். இந்த குழுவை ஏற்க மாட்டோம் என கூறும் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம். குழுவை மதிப்பவர்கள், அதனிடம் தங்கள் கருத்துகளை கூற வேண்டும்” என தெரிவித்தனர்.

விவசாயிகள் சங்கங்கள் என்ன சொல்கின்றன?

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்கவில்லை என்றும், மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர் விவசாயிகள்.

“உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவின் முன்பும் நாங்கள் ஆஜராக மாட்டோம், எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள், மேலும் அவர்கள் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பல்வேறு கட்டுரைகளையும் எழுதி வருகிறார்கள். இதுபோன்ற கமிட்டியை அமைப்பது பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் செயலாகும் ”என்று பாரதிய கிசான் யூனியன் (ஆர்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பின்னால் மத்திய அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள் சங்கத்தினர், திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். 'விவசாயிகள் குடியரசு தினத்தையும் கடைபிடிப்பார்கள், ஆனால் இது குறித்தும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. எங்களின் முந்தைய அறிவிப்புப்படி ஜனவரி 13, 18 மற்றும் 23 தேதிகளில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் மீதான போராட்டம் தொடரும். விவசாயிகள் அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளவே விரும்புகிறோம், உச்சநீதிமன்றத்துடன் அல்ல என்று விவசாயிகள் சட்ட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் அச்சம் என்ன?

49 நாட்களாக கடும் பனி, மழை, வெள்ளம் அனைத்தையும் எதிர்கொண்டு கட்டுக்கோப்புடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் விவசாயிகள், இதுவரை போராட்டக்களத்தில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்தியஅரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. வரும் ஜனவரி 26 இல் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், விவசாயிகள் நாடுதழுவிய ட்ராக்டர் பேரணியையும் திட்டமிட்டுள்ளனர், அதனால் குடியரசு தின விழாவிற்கு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது மத்திய அரசு. விவசாயிகளின் ஒற்றை கோரிக்கை மூன்று சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்பது, ஆனால் மத்திய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவேதான் உச்சநீதிமன்றம் இந்த சிக்கலில் தலையிடுகிறது.

‘உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலமாக விவசாயிகளை டெல்லியை விட்டு அப்புறப்படுத்துவதே நோக்கம், அதன்பின்னர் சில மாதங்களுக்கு பிறகு இந்த நான்குபேர் கொண்ட குழு, வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை அளிக்கும். அதன்பிறகு உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த தீர்ப்பினை ரத்து செய்யும், பின்னர் இதுபோல எழுச்சியான போராட்டத்தை மத்திய அரசு நடத்தவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியும்’ இதுதான் மத்திய அரசின் திட்டம் அதற்கு சாதகமாகவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு உள்ளது, மத்திய அரசும், வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களை இந்த தீர்ப்பினை ஆதரிப்பதை பார்த்தாலே இந்த உண்மை புரிகிறது என்கின்றனர் விவசாய சங்கத்தலைவர்கள்.

 -வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com