பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியில் விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டனத்திற்குரியது. வேளாண் மண்டல அறிவிப்பு என்பது வெற்று அறிவிப்பா? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனா ஊரடங்கு காலத்திலும் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழையபாளையம் வரையிலான புதிய பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
விளைநிலங்களை 5 அடி ஆழத்திற்குத் தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்? இதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட தமிழக முதல்வருக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.