இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்றைய வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார்
இன்று தாக்கல் செய்யப்பட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான திட்டங்கள்:
இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் உழவர், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும், இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மை தொகுப்புகள் 7500 ஏக்கரில் உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக 'நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்' செயல்படுத்தப்பட்டு வரும் ஆண்டில் விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு 20 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும், இதற்காக 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
காடுகளில் மழையை ஈர்க்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை தரும் விதமாகவும் வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மரம், சந்தன, மகோகனி, தேக்கு போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
தோட்டக்கலை துறை மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் 50 எக்டர் அளவிலான தொகுப்புகள் மாவட்டத்திற்கு 2 என்ற விகிதத்தில் ஏற்படுத்தப்பட்டு தமிழக அங்கக வேளாண்மை இயக்க செயல்படுத்தப்படும். இத்தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சிகள், மண்வளம் குறித்த தகவல்கள், இடுபொருட்கள், விளைபொருட்களின் ரசாயன தன்மையை ஆராயும் ஆய்வகங்கள், அங்கக சான்று பதிவு போன்ற செயல்பாடுகளுக்கான திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இயற்கை எருவிற்காக மாட்டுக்கொட்டகை, மண்புழு உரக்கூடங்கள் போன்றவை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து அமைக்கப்படும் .
இனி விதைகளே பேராயுதம் எனும் நம்மாழ்வாரின் கூற்றுக்கு இணங்க தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களில் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்து தற்சார்பினை உறுதிப்படுத்தும் வகையில், பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், மூலிகைகளின் விதைகளின் சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உருவாக்கப்படும். இந்த விதைகள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
பனை மேம்பாட்டு இயக்கம், பனையின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு, பனை விதைப்பு, பனையேற்ற கருவிகள் கண்டுபிடிப்பு போன்ற பணிகளுக்கு 2 கோடியே 65 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் நிதியாண்டில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகைத் தோட்டங்கள் 4 ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் வேளாண்மை துறைக்கான 2வது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.