உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய விவசாயிகள் திக்குனியாவில் கூடினர். மஹாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்ட காரணத்தால், மவுரியா ஹெலிகாப்டர் பயணத்தை கைவிட்டு சாலைமார்க்கமாக சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.
இந்த இடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தபோது துணை முதலமைச்சரை வரவேற்க மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ராவின் கார் ஏறியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததால், எதிர்ப்பாளர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்ததில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர் டாக்டர் தர்ஷன் பால், மிஸ்ரா மற்றும் காரில் இருந்த மற்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அஜய் மிஸ்ரா மத்திய அமைச்சரவையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த சம்பவம் 'மனிதாபிமானமற்ற படுகொலை' என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரியங்கா காந்தி நாளை லக்னோவுக்கு வருவார் என்றும், போராடும் விவசாயிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் இந்த சம்பவத்தைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.