புரெவி புயல் வலுவிழந்தபோதும் பெய்துவரும் அதிகனமழையால் குடியிருப்புகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு, வயல் வெளிகளில் புகுந்து பயிர்களையும் நாசம் செய்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. வயல்களில் உள்ள தண்ணீர் வடிய வழியில்லாமல் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்ட விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்களை சேதமடையச் செய்துள்ளது. அதன் வீடியோ தொகுப்பு இங்கே...
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. அகரலாம்பாடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரும் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்துவரும் கனமழை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சுமார் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை அரசு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் புவனகிரி கரிவெட்டி கிராமத்தில் பலவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வயல்வெளியில் தண்ணீர் புகுந்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
புரெவி புயல் வலுவிழந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் பல்வேறு இடங்களில் சுமார் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் தஞ்சை மாவட்டம் காட்டூரில் அறுவடைக்கு தயாராக இருந்த பொங்கல் கரும்புகள் மண்ணோடு மண்ணாக சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பெய்த கன மழையால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பெருமழை காலங்களில் மழைநீர் வெளியே செல்ல வடிகால் வசதி இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக 5000 ஏக்கர் பரப்பிலான விளைநிலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.