பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த பிஆர்.பாண்டியன், “2020-21 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனே மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். விவசாயிகளின் நெல்லை தங்குதடையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும். பழைய நடைமுறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும்
அதேபோல் கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லவும் அதனை கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய குழுவை அமைக்க வலியுறுத்தியும் வருகின்ற 30ஆம் தேதி திருவாரூர் தஞ்சாவூர் நாகை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்” என்று கூறினார்.