திருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்கள் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் மாதம் 15ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் முப்போகம் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் இவை அனைத்தும் அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், இதுவரை சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாத சூழலில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் பயன் பெறும் வகையில் அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் எப்போது ப்ரீமிய தொகை செலுத்த வேண்டும் என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்
அதன்படி விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் தாங்கள் விவசாயம் செய்யும் பரப்பின் சிட்டா அடங்கல் பெற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் ப்ரீமியம் கட்ட வேண்டும்.
ஏக்கர் ஒன்றுக்கு 488 ரூபாய் 25 பைசா ப்ரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது