திருவாரூர்: அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நேரடி விதைப்பு பணி தொடக்கம்

திருவாரூர்: அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நேரடி விதைப்பு பணி தொடக்கம்
திருவாரூர்: அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நேரடி விதைப்பு பணி தொடக்கம்
Published on

திருத்துறைப்பூண்டி அரசு விதைப் பண்ணையில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நேரடி விதைப்பு பணியை திருவாரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் சிவகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதைப் பண்ணையில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா மூன்று ஏக்கரிலும் ,கருப்பு கவுனி 6 ஏக்கரிலும் இன்று இயந்திரம் மூலம் நேரடியாக விதைக்கப்பட்டது. இந்த விதைப்பு பணியை திருவாரூர் வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான தீபாம்பாள்பட்டினம் அரசு விதைப் பண்ணையில் 7 ஏக்கரிலும், கீராந்தி அரசு விதைப் பண்ணையில் 6 ஏக்கரிலும் இந்த பாரம்பரிய நெல் சாகுபடி இன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் சிவக்குமார், “திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி 2 ,36 ,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 1,36,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி தெளிப்பு மற்றும் நடவு பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 1,20,000 ஏக்கர் பரப்பளவில் நடவு பணிகள் நடைபெற்று இம்மாத இறுதிக்குள் அதற்கான பணிகளும் நிறைவடையும்.

முன்னதாக 1,37,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வந்த குருவை நெற்பயிர், இதுவரை 34,000 ஏக்கர் பரப்பளவில் அறுவடையை கண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் பரப்பளவிற்க்கு 7,600 கிலோ நெல் கிடைத்துள்ளது. குருவை நெல் சாகுபடி மட்டுமன்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் குருவை கொள்முதல் செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அரசு விதைப் பண்ணைகளில் இயற்கை நெல் ரகங்கள் 39 ஏக்கர் பரப்பளவில் நெல் விதைக்காக சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது உரம் மத்திய அரசு தேவையான அளவிற்கு மட்டும் வழங்கி வருகிறது. இதனால் உரம் தட்டுப்பாடு ஏற்படுவது போல் தெரிகிறது. இந்த மாதத்திற்கு 9,360 மெட்ரிக் டன் உரம் தேவை உள்ள நிலையில் தற்போது வரை 4,500 டன் உரம் கையிருப்பில் உள்ளது. இந்த வார இறுதியில் காரைக்காலுக்கு கப்பல் மூலம் 46,000 டன் உரம் வர உள்ளது இதில் 10,000 டன் கேட்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை இயற்கை முறையில் நெல் ரகங்கள் சாகுபடிக்காக 300 ஏக்கர் வரை அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய நெல் ரகங்களை விற்பனை செய்வதற்கான சந்தைப்படுத்துவதற்கு நெல் ஜெயராமன் அமைப்பு மற்றும் விற்பனை குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

பாலமுருகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com