நிலக்கடலை விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்து கட்டுபடியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரத்தில் வட்ட ஓடை, பிள்ளையார் ஊத்து, கோவில் காடு, பிரம்புவெட்டி ஓடை போன்ற விவசாய பகுதிகளில் இறவை பாசனம் மூலம் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் போதிய அளவு மழை பெய்து வந்ததால் விளைச்சல் அதிகரித்தது. தற்போது நிலக்கடலை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கடலை விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்து கட்டுபடியான விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பறிக்கப்பட்ட நிலக்கடலை கிலோ 1க்கு ரூ.30 முதல் ரூ.35 வரை வெளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் நிலக்கடலை திரட்சியாகவும் அதிக விளைச்சலும், கட்டுபடியான விலையும் கிடைப்பதால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.