“துண்டை இடுப்பில் கட்டாதே, தோளில் போடு. ஆண்டைகள் உன்னை அடித்தால் நீயும் திருப்பி அடி” என குறைவான கூலிக்கு பொழுதெல்லாம் உழைத்த விவசாயக்கூலிகளின் அடிமை வாழ்வை மீட்டெடுத்த பொதுவுடமை ஒளிச்சுடர் பி.சீனிவாசராவ் பிறந்தநாள் இன்று.
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த படகராவில் பிறந்த சீனிவாசராவ், கல்லூரிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அன்னிய துணிகள் எரிப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், சிறையில் கடும் தண்டனைகள் உட்பட பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவர். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய இவர், பின்னர் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் இந்திய பொதுவுடமைக்கட்சியை உருவாக்கிய முதுபெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1936 இல் தொடங்கப்பட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை தமிழகம் முழுக்க தொடங்க அரும்பாடுபட்டவர் இவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டதன் பேரில் 1943 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை தொடங்கினார் சீனிவாசராவ். அப்போது திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளடக்கிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என அழைக்கப்பட்டது. அந்த காலத்தில் தஞ்சையில் நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்களிடம்தான் இருந்தன, அவர்களிடம் விவசாயக்கூலிகள் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது. விடியும் முன்னே வயலுக்கு செல்லும் கூலிகள், இரவு வரை வேலை செய்ய வேண்டும், ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி மிக மிக சொற்பமே.
விவசாயக்கூலிகள் தங்கள் வேலையில் சிறிது பிசகினாலும் சாட்டையடியும், சாணிப்பாலும் தான் கொடுமையான தண்டனை. ஐந்துபிரி கொண்ட சாட்டையில் கூலாங்கல்லை சொருகி கூலிகளின் தோல் கிழியும் வரை அடிப்பார்கள் பண்ணையார்கள், அதுபோல மூங்கில் குழாயில் சாணிப்பாலை ஊற்றி குடிக்கவைக்கும் கொடுமையும் அரங்கேறியது. இந்த கொடுமைகளையெல்லாம் ஒழிக்க ஓயாது உழைத்தார் சீனிவாச ராவ். தஞ்சை மாவட்டத்தில் இவர் காலடி படாத கிராமமே இருக்காது, ஒவ்வொரு ஊருக்கும் சென்று மக்களோடு மக்களாக உழவு செய்து மக்களை திரட்டி விவசாய சங்கங்கள், பெண்கள் அமைப்புகளை கட்டியமைத்தவர் இவர்.
இவரின் தொடர் முழக்கங்கள் மற்றும் அதிரடி போராட்டங்களால் 1950 களில் சாட்டையடி, சாணிப்பால் கொடுமை முடிவுக்கு வந்தது. அதுபோல விவசாயக்கூலிகளின் வேலைநேரம் குறைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு முறையான கூலியும் கொடுக்க வழிவகை ஏற்பட்டது. சில வரிகளில் கூறிய இந்த இலட்சியங்களை வென்றெடுக்க, சீனிவாசராவ் பட்ட வலிகளும், செய்த போராட்டங்களும் தமிழகத்தின் சிவப்பு வரலாறு. தஞ்சை மட்டுமின்றி வத்திராயிருப்பு, மதுரை, கோவை என தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுக்க முழக்கமிட்டவர் இவர். விவசாயிகள் போராட்டம் மட்டுமின்றி அப்போது சமூகத்தின் ஊறியிருந்த சாதிய பிரச்னைகளுக்கு எதிராகவும் காத்திரமான எதிர்ப்புக்குரலை பதிவு செய்தவர் இவர்.
கிட்டத்திட்ட 20 ஆண்டுகள் தஞ்சை மாவட்டத்தின் திசைவெளியெங்கும் போர்க்குரலை பரவச்செய்த பொதுவுடமை சுடரான சீனிவாசராவ், 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 30இல் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இன்று விவசாயிகள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு வித்திட்ட இவருக்கு நன்றிக்கடன் ஆற்றும் விதமாக, இப்போதும்கூட தஞ்சை மாவட்டங்களின் பல வீடுகளில் சீனிவாசராவின் படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. இவருக்கு 14-11-2009 இல் திருத்துறைப்பூண்டியில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்தது.
- வீரமணி