தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தற்போது கோடை நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி அறுவடை செய்து மழையால் நெல் மணிகள் நனைந்து வீணான சூழ்நிலையில், சம்பா சாகுபடி இறுதிக்கட்டத்தில் மழை பெய்ததன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் அறுவடை பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தேவைக்கேற்றவாறு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.