தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை: விவசாயிகளுக்கான திட்டங்கள், அறிவிப்புகள் முழு விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை: விவசாயிகளுக்கான திட்டங்கள், அறிவிப்புகள் முழு விவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை: விவசாயிகளுக்கான திட்டங்கள், அறிவிப்புகள் முழு விவரம்
Published on

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று முதன்முறையாக கலைவாணர் அரங்கில் கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளான நேற்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய ஆளுநர் உரையில் விவசாயம் மற்றும் வேளாண்துறை தொடர்பாக வெளியான அறிவிப்புகள், திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவான பட்டியல்..

  1. வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் இந்த அரசு வேளாண்மை துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நல சங்கங்கள், வல்லுனர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடை பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  2. மீண்டும் உழவர் சந்தைகள், கிராம சந்தைகள்: முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும். கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை விரிவுபடுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  3. போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள்: 2021 - 22 ஆம் ஆண்டில், 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, திட்டமிடப்பட்டபடி இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதிகளில் மழைநீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக 4,061 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  4. நீர்வளங்களுக்கு தனி அமைச்சகம்: தமிழ்நாடு போன்ற நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு நீர்வள மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
  5. மேகதாது & முல்லைப்பெரியாறு விவகாரம்: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க, இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், இந்திய அரசையும் இந்த அரசு கேட்டுக் கொள்ளும்.
  6. காவிரி - குண்டாறு & அத்திக்கடவு - அவினாசி & இடைமலையாறு : முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஒன்பதாம் தேதி அன்று திருச்சி - கரூர் இடையேயான மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்கா அடிக்கல் நாட்டி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம் -  ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதைடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com