செறிவூட்டப்பட்ட அரிசி: "கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகிறதா தமிழக அரசு?"- பிஆர் பாண்டியன் அச்சம்

செறிவூட்டப்பட்ட அரிசி: "கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகிறதா தமிழக அரசு?"- பிஆர் பாண்டியன் அச்சம்
செறிவூட்டப்பட்ட அரிசி: "கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகிறதா தமிழக அரசு?"- பிஆர் பாண்டியன் அச்சம்
Published on

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவை விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.‌

இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் செறி ஊட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.‌ இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்துப் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்.

தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம், விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com