பயிர்க்காப்பீடு செய்ய நவ.15ஆம் தேதி கடைசி நாள் - தமிழக வேளாண் நலத்துறை அறிவிப்பு

பயிர்க்காப்பீடு செய்ய நவ.15ஆம் தேதி கடைசி நாள் - தமிழக வேளாண் நலத்துறை அறிவிப்பு
பயிர்க்காப்பீடு செய்ய நவ.15ஆம் தேதி கடைசி நாள் - தமிழக வேளாண் நலத்துறை அறிவிப்பு
Published on
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று தமிழக வேளாண் நலத்துறை அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரை விவசாயிகள் உடனடியாக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டு, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில், நெற்பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் உடனடியாக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
காப்பீடு செய்யும் போது , முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் , ஆதார் அட்டை நகல், பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையினை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இந்த ஆவணங்களுடன் கடைசி தேதி வரை விவசாயிகள் காத்திருக்காமல் பயிரை காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கிகளையோ அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com