``நீரின்றி தவிக்கிறார்கள் விவசாயிகள்”- கள ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்த மாணவிகள்

``நீரின்றி தவிக்கிறார்கள் விவசாயிகள்”- கள ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்த மாணவிகள்
``நீரின்றி தவிக்கிறார்கள் விவசாயிகள்”- கள ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்த மாணவிகள்
Published on

ஆண்டிபட்டியில் போதிய தண்ணீர் இல்லாமலும் விளை பொருள்களை சந்தைப்படுத்த முடியாமலும் விவசாயிகள் தவித்துவருவதாக, தோட்டக்கலை கல்லூரி மாணவியரின் 60 நாள் "தங்கல்" திட்டத்தின் ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே விவசாயிகளின் குறைகளை போக்க தேனி ஆட்சியரிடம் மனு சமர்பிக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவியரின் கோரிக்கை மனுவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியின் மாணவியர், "தங்கல்" திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி பகுதியில் ஆய்வொன்று செய்திருந்தனர். அதன் முடிவு ஆய்வறிக்கையை மனுவாக தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ. முரளீதரனிடம் அவர்கள் வழங்கி உள்ளனர். தங்கள் ஆய்வறிக்கையில் அவர்கள், ஆண்டிபட்டி பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமை, வேளாண் உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்துதலில் உள்ள சிரமங்கள், விற்பனை செய்யப்படாத விளைபொருள்கள் குளிர்பதன கிடங்கு இல்லாமல் வீணாவது உள்ளிட்ட குறைகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியர்களான தாரணி, திவ்யா, சோடோயல், துர்க்காதேவி, பாமிதா, காயத்திரி, கௌசிகா, இமயமதி உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆண்டிபட்டி வட்டார பகுதிகளில் ஆய்வு செய்ய கல்லூரி நிர்வாகம் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியான "தங்கல் திட்டம்" மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டிபட்டி வட்டார பகுதியில் அவர்கள் 60 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த 60 நாட்களில் ஆண்டிபட்டி வட்டாரத்திலுள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கோத்தலூத்து, கொத்தப்பட்டி, ஏத்தக்கோயில் உள்ளிட்ட 10 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து, அவர்களிடம் கலந்து உரையாடியுள்ளனர். விவசாயிகளுடன் கலந்து அவர்களின் குறைகளையும், விவசாயிகளுக்கான தேவைகளையும் மாணவியர் ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளின் தோட்டங்களையும் பார்வையிட்டு அங்கு அவர்களுக்கு சில செயல்முறை விளக்கம் மற்றும் விரிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

இந்த "தங்கல்" பணியின்போது விவசாயிகள் தங்களது விவசாயம் பற்றிய குறைகளையும், தங்களுக்கான தேவைகளையும் மாணவியரிடம் தெரிவித்துள்ளனர் . அவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையை, தாங்கள் படிக்கும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியிலும் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் முடிவில், ஆண்டிபட்டி வட்டார பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்வதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும் “விவசாயம் செய்வதற்கான வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதையும் உணர முடிந்துள்ளது. தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வந்திருப்பதும் மாணவியரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருள் அதிக விளைச்சல் இருந்தும் விற்பனை இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துகையில், விவசாயிகள் சிரமம் கொண்டு வருகின்றனர்.

எனவே ஆண்டிபட்டி வட்டார விவசாயிகளின் நலன் காத்து விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யவும், அவர்களின் வேளாண் உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்துதலில் உதவிகள் மேற்கொள்ளவும், விற்பனையாகாத வேளாண் உற்பத்திப் பொருள்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கவும், ரசாயனம் கலக்காத இயற்கை வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்களை அரசே வழங்க வேண்டும்” என அம்மாணவியர் தெரிவித்துள்ளனர்.

`பட்டி வட்டார விவசாயிகளின் இந்தக் குறைகளை களைந்து அப்பகுதி விவசாயிகளின் தேவையை உணர்ந்து அதை பூர்த்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும். மேலும் இயற்கை வேளாண்மையை அது ஊக்குவிப்பதாக அமையும். இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவியர் தங்கள் ஆய்வறிக்கையின் மூலம் கிடைத்த தகவல்களை தேனி மாவட்ட ஆட்சியர் கே.வீ. முரளிதரனிடம் கோரிக்கை மனுவாக சமர்ப்பித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆராய்ச்சி மாணவியரிடம் உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com