டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள்
Published on

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 200 நாட்களுக்கு மேலாக பல்வேறுகட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அதரவாகவும், இவர்களை அழைத்துப் பேசாத மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை இங்கு பார்க்கலாம்.

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரதான சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக நடைபெறும் விவசாயிகள் போராட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் தங்களை டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திறகு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், விவசாயிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: கடலூர் படைவீரர் மாளிகை எதிரில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை பறிக்காதே, குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே, விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த 200 நாட்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைப்பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம், மற்றும் வேளாண் வேலைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: மத்திய அரசு வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் சட்டத்தை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சிவகங்கை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரைக்குடி 5 விளக்கு அருகே தொழிற் சங்கங்களின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு: ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ள மூன்று வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் உள்ளதாக கூறி விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்சார சட்டம் 2020 மற்றும் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் ஆகியவைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் வழக்கறிஞர் வினோத் தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி ராம்நகரில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சிஐடியூ, எல்பிஎப், எ.ஐ.டி.யூ.எஸ். சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத்துறை மற்றும் அரசு துறைகளை தனியார்மயம்படுத்தும் கொள்கையை கைவிட கோரியும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிபடுத்தக் கோரியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும், புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட கோரியும், வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்தும் குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 நிவாரண தொகையும் ஓவ்வொருவருக்கும் 10 கிலோ உணவு பொருள் வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்: சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் சார்பில், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து முழக்கம் எழுப்பியவாறு கரூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம். முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள், 3 புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்டம் 2020 ஆகியவற்றை திரும்பப் பெறப்பட வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உரிய முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com