தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. அண்ணா நகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், ரயில் நிலையம், அனுப்பானடி, காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் பெய்த கனமழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில பகுதிகளில் கழிவுநீரும் மழைநீரும் கலந்து குடியிருப்புகளில் புகுந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே நன்கு மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலும் மழை பெய்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. ஆத்தூர், தென்னங்குடிபாளையம், ராமநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது. இந்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் சேரும் என்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.