பஞ்சாபின் ராஜ்புரா நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் விவசாயிகளால் குடும்ப உறுப்பினர்களுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பாஜக தலைவர்கள், 12 மணி நேர சோதனை மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பின்னர் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போலிக்காரணங்களைக்கூறி விவசாயிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியதன் காரணமாக இந்த பாஜக தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்புரா நகரில் உள்ள பாரத் விகாஸ் பரிஷத் கட்டிடத்தில் மாவட்ட அளவிலான கட்சி கூட்டத்திற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் பூபேஷ் அகர்வால் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்து விவசாயிகள் அதனை தடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், பாஜக தலைவர்கள், ஒரு வீட்டில் இந்த கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அப்போது அங்குவந்த விவசாயிகள் அவர்களை பணயக் கைதிகளாக அடைத்து வைத்தனர். சமூக ஊடகங்களில் வலம் வரும் ஒரு வீடியோவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளூர் கவுன்சிலர் சாந்தி ஸ்வரூப்பைத் துரத்திச் செல்வதையும், போலீஸ்காரர்களால் அழைத்துச் செல்லப்படும்போது அவரது ஆடைகளைக் கிழிப்பதும் பதிவாகியிருக்கிறது.
அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நோக்கி பாஜக பொதுச்செயலாளர் பூபேஷ் அகர்வாலின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால்தான் இந்த சம்பவம் நடந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி சிறைபிடிக்கப்பட்ட பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தது. இதன்பின்னர் காவல்துறையினர் பாஜகவினரை பத்திரமாக மீட்டனர்.