முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10 லட்சம் ஏக்கர் நிலங்கள்மீது ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாடு அனைத்து விவாசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மேடான வறண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்கள் துண்டிப்பு விவகாரம் தொடர்பாக சின்னமனூரில் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சின்னமனூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது, ''தமிழக நீர்ப்பாசனத் துறை ஒப்புதலோடு, நீதிமன்ற அனுமதியோடு மேடான வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட குழாய்களை, ஒரு சிலரின் சுய லாபத்திற்காக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் துண்டித்துள்ளனர். இது அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவை மீறும் செயலாகும். தமிழக முதலமைச்சர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நவம்பர் 1ஆம் தேதி சின்னமனூர் காந்தி சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்படும். தேனி மாவட்டம் மட்டுமின்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10லட்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு அதிகாரமிக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அந்த ஒரு குடும்பத்திற்கு சொந்தமான பினாமி பெயரில் உள்ள நிலங்களை, விவசாய தொழிலாளர்களுக்கு உபரி மற்றும் தரிசு நிலங்களை வழங்குவோம் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து தர வேண்டும் கோரிக்கையும் வலியுறுத்தப்படும்" என்றார்.
முல்லைப் பெரியாறு விஷயத்தில் பி. ஆர் பாண்டியன் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. தந்தை பெரியார் வரலாறுகூட தெரியாது என அவர்மீது வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு பதிலளித்த பி.ஆர் பாண்டியன், "ராஜா வீட்டு கன்றுக்குட்டி கட்டுப்பாடு இல்லாமல் பேசியதை நானும் தொலைக்காட்சி வாயிலாக கேட்டு வேதனை அடைந்தேன். அவருக்கு பதில் அளித்து நான் என் தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஊர் சொத்தை அனுபவிக்கிற குடும்பம் அல்ல. போராளி குடும்பம். எனக்கு எல்லைகள் கிடையாது. இந்த விமர்சனங்களை படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்வேன்" என்றார்.
விவசாயத்தை நாசமாக்க வேண்டும் என்று எந்த நீதி அரசர்களும் தீர்ப்பளிக்கவில்லை. எனவே நீதி அரசர்களுக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் அவரது குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை அவர் திரும்பப்பெற வேண்டும் எனவும், பி.ஆர் பாண்டியன் தேனி மாவட்ட விவசாயிகளை குழப்புகிறார் எனவும் தமிழக நிதி அமைச்சரின் சகோதரர் கூறியதற்கு பதில் அளித்த பி.ஆர் பாண்டியன், "தேனி மாவட்ட விவசாயிகளை அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குழப்ப வேண்டாம். மு.க ஸ்டாலின் அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசிற்கும் விவசாயிகளுக்கும் இருக்கின்ற உறவை சீர்குலைக்க வேண்டாம் என்று அமைச்சர் குடும்பத்தை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.