குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில வெளியேற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கவில்லை எனில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோயில் அறக்கட்டளை குத்தகை விவசாயிகள் குடியிருப்பு மனை உரிமையாளர்கள் உரிமை மீட்பு மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குத்தகை நில உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 15 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான விளைநிலங்களையும் குடியிருப்பு மனைகளையும் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு இயற்கை சீற்றங்களால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிய நிலையில் கோவில் நிலங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குத்தகை பாக்கி இருப்பதாகக் கூறி நிலுவைத் தொகை வசூலிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், தங்கள் கோரிக்கை மீது தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.