கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.மானம்பாடி பகுதியில் வீராணம் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டுள்ள சுமார் 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. வடிகால் முறையாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, சிங்கார குப்பம், கிள்ளை கலைஞர் நகர், பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வீராணம் ஏரி பாசனத்தை நம்பி இந்த பகுதியில் மொத்தம் 4 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நடவு செய்து ’ஒரு வாரம் முதல் 2 வார பயிர்கள்’ நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்கள் முழுவதும் குளம்போல் காட்சியளிக்கின்றன.
வீராணம் ஏரியை நம்பி இந்த பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலை உள்ளது. ஆனால் பக்கிங்காம் கால்வாயிலிருந்து மறுமார்க்கமாக கடல் நீர் திரும்பி வருவதால் கடல் நீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்து பாதிப்பு ஏற்பகிறது. இதன் காரணமாகவே பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ள சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தற்போது விவசாய பணிகள் மேற்கொள்ளப்படாமல் தரிசாக காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால் கனமழை காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் முறையாக வடியாமல் விவசாய நிலங்களில் தேங்கி நின்று பயிர்களை நாசம் செய்வதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பயிர் காப்பீடு மூலமாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் பயிர்காப்பீடு பதிவு செய்யப்படவில்லை எனவும் தாங்கள் செலவு செய்த பணம் முழுமையாக பயிர் காப்பீட்டின் மூலம் கிடைக்காது என்பதால் பெரும் இழப்பினை சந்திக்கக்கூடிய நிலையில் அரசு நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.