புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு, பின் கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகளை மூடுவதற்கான ஆய்வு இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலை சுற்றிய பகுதிகளான வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, கரம்பங்குடி, வடகாடு ஆகிய பகுதிகளில் 1990 - 1995 -ம் ஆண்டுகளில் 6 எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டில் நெடுவாசலில் அந்த கிணறுகளை அடிப்படையாக வைத்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்ட நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டத்தின் முடிவாக மத்திய மாநில அரசுகள் ‘இங்கு மக்களின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது’ என வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள், இப்பணிக்காக முந்தைய ஆண்டுகளில் தோண்டப்பட்ட எண்ணெய் கிணறுகளை மூடுவதற்கு கோரிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டனர். இதில் நெடுவாசல் மட்டுமன்றி வானக்கம்காடு பகுதி மக்களும் தங்கள் கிராமத்திலுள்ள 1994-ம் ஆண்டில் வைக்கப்பட்ட 9,000 அடி ஆழமுள்ள கிணற்றையும் மூட கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கைவிடப்பட்ட 6 எண்ணெய் கிணறுகளில் 4 எண்ணெய் கிணறுகளை மூடுவதற்கான ஆய்வு இன்று வாணக்கன்காடு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆய்வு, காரைக்கால் ஓஎன்ஜிசி மண்ணியல் வல்லுநர் அருண்குமார் தலைமையிலான எழுவர் குழுவால் வானக்கம்காடு பகுதியிலுள்ள 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பயனற்று இருக்கும் இந்த எண்ணெய் கிணறுகள் அனைத்தும் விரைவில் மூடப்படும். முதற்கட்டமாக தற்போது வாணக்கன்காட்டில் உள்ள கைவிடப்பட்ட 4 எண்ணெய் கிணற்றை மூடுவதற்கான முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது” என்றனர்.