ஓமலூர் வேளாண்மைத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை பருவம் சார்ந்து சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. சிறுதானியங்களை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கியதால், சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22 : முக்கிய அம்சங்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை பருவம் சார்ந்து சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் சக்கரைசெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஓமலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமா, வேளாண்மை அலுவலர் மதுமிதா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு சிறு தானிய விவசாயத்தில் கிடைக்கும் கூடுதல் வருவாய், பயிர் சாகுபடி முறைகள், நீர் பாசனம், தெளிப்புநீர், சொட்டுநீர் பாசனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும், மானிய விலையில் இடுபொருட்கள், மருந்து மற்றும் உரங்கள் கலவைகள், உதவிகள், மானியங்கள், சிறு தானியத்தின் விற்பனை, லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் பேசும்போது, “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை பொருட்கள், சிறுதானியத்தில் இருந்தே கிடைக்கிறது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதில் பொதுமக்களின் நாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கேழ்வரகு, தினை, சாமை, வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், நெல்லுக்கு இணையாக சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்கும் முயற்சிகளை வேளாண்மை துறை மேற்கொண்டு வருகிறது.
சிறுதானியங்கள் குறைந்த நீரிலும், மண்வளம் குறைந்த பகுதிகளிலும், விளையும் என்பதால் இந்த கோடையில், அவற்றின் சாகுபடிக்கு வேளாண்மை துறை ஊக்கம் அளித்து வருகிறது. தமிழக வேளாண்மை துறை சார்பில் நடப்பாண்டில், 45 லட்சம் டன் சிறுதானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், தற்போது சாகுபடி பரப்பு 2 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதால் உற்பத்தி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.