திமுக அரசின் அலட்சியத்தால் குறித்த காலத்தில் தரமான விதை நெல் மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாகவும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த 10 ஆண்டுகளாக விசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து அவர்கள் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றியது. காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க போராடி வெற்றி பெற்றது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, குடிமராமத்து திட்டம், வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம், அதிகளவில் கூட்டுறவு கடன், அதிகளவில் பயிர் காப்பீடு, இருமுறை கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, 24 மணி நேர மும்முனை மின்சாரம் என பல சாதனைகளை செய்தோம்.
உணவு தானிய உற்பத்தியில் ஐந்து முறை கிருஷி கர்மான் என்ற மத்திய அரசின் உயர்ந்த விருது, மத்திய அரசின் வேளாண்மை க்கான சிறந்த மாநில விருது, நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முதலிடம், அதிக நெல் கொள்முதல் செய்து சாதனை என பல பெருமைகளை அம்மாவின் அரசு பெற்றது. ஆனால் தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல் மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை அடுத்துள்ள வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி, தனது ஒன்பது ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கரில் தனியாரிடமிருந்து ஏடி-36 என்ற ரக விதையை வாங்கி நாற்று தயார் செய்தார். மீதமுள்ள இரண்டு ஏக்கரில் செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக நெல்லை வாங்கி நாற்று விட்டார். ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் திமுக அரசு வழங்கிய விதைகள் முளைக்க வில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்தார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி வீரமணி வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார், ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும் வீணாகிய விதை நெல்லுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். அதேபோல் வேறு எங்கேனும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு, தரமான விதைகளை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்